திரையில் வரையப்பட்ட தமிழ்நிலம்

பிரேம்
கட்டுரைகள்


அளவு 1 X 8
தாள் 18.6 கே.ஜி. மேப்லித்தோ
பக்கங்கள்: 296
விலை ரூ. 260



தமிழ்ச் சமூகத்தின் அரசியல்-சமூக உளவியல் பற்றிய புரிதல்களை விரிவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக அமைந்தவை இந்தக் கட்டுரைகள். திரையில் வரையப்பட்ட தமிழ்நிலம் என்ற முதல் பகுதி கட்டுரைகள் கோட்பாடுகளையும் கருத்தியல்களையும் முன்வைத்து திரைப்படங்கள் பற்றிய சொல்லாடல்களை உருவாக்கும் முயற்சிகள். திரையில் படியாத தமிழ் மனம் என்ற இரண்டாவது பகுதி கோட்பாடுகளை, கருத்தியல்களை அரசியல் தளத்துடன் உறவுபடுத்தும் கட்டுரைகள். இவை இரண்டு பகுதிகளும் ஒன்றுடன் ஒன்று உறவுடையவை, தொடர்ச்சியாக அமைகின்றவை, ஒரே வகையான கேள்விகளைத் தம்முள் கொண்டிருப்பவை. திரைப்படம், மக்கள் அரசியல் இரண்டும் நவீன உருவாக்கங்கள், ஊடகக் கட்டமைப்புகள், அத்துடன் இரண்டுமே தனிமனிதர்களுக்கு அதிக இடமளிக்கும் கூட்டு நினைவுகளால் அமைந்தவை. அதனால், தற்காலச் சமூக உளவியல் சொல்லாடலில் இரண்டும் இணையமைப்புகளாக மாறிவிடுகின்றன.

நீளும் கனவு

கவின் மலர்
சிறுகதைகள் 

அளவு 1 X 8
தாள் 18.6 கே.ஜி. மேப்லித்தோ
பக்கங்கள்: 96
விலை ரூ. 80



கவின் மலர், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பிறந்தவர். பெற்றோர்: சரோஜா - காவியன். தந்தை பெரியார் நடத்தி வைத்த இறுதியும் மூன்றாவதுமான இந்து - முஸ்லிம் திருமணம் இவர்களுடையது. அகில இந்திய வானொலியின் காரைக்கால் பண்பலையில் சிறிதுகாலம் அறிவிப்பாளராய் இருந்த கவின் மலர், பிறகு, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றினார். அதன்பின் ஊடகத்துறைக்குள் நுழைந்தார். ‘புதிய தலைமுறை’, ‘ஆனந்தவிகடன்’ போன்ற இதழ்களில் பத்திரிகையாளராய் பணியாற்றினார். தற்போது ‘இந்தியா டுடே’ இதழில் பணிபுரிகிறார். அ. மங்கையின் ‘மரப்பாச்சி’, பிரளயனின் ‘சென்னைக் கலைக்குழு’, ஞாநியின் ‘பரீக்ஷா’, ஸ்ரீஜித் சுந்தரத்தின் ‘கட்டியக்காரி’ ஆகிய நாடகக் குழுக்களின் நாடகங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து நாடகத்துறையில் அரங்கக் கலைஞராகவும் இசைப்பாடகராகவும் இயங்கிவருகிறார். இவரது முதல் சிறுகதை ‘இரவில் கரையும் நிழல்கள்’, நவம்பர் 2010 ‘உயிர் எழுத்து’ இதழில் வெளியானது. காஞ்சா அய்லய்யாவின் நேர்காணல் இவருடைய மொழியாக்கத்தில் ‘இந்து ஆன்மிகமே பாசிசம்தான்’ என்கிற தலைப்பில் சிறுநூலாக வெளிவந்துள்ளது. காஞ்சா அய்லய்யாவின் ‘எருமை தேசியம்’ நூலை டாக்டர் ஜீவானந்தத்துடன் இணைந்து தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். இவருடைய கவிதைத் தொகுப்பு: ‘அலறல்களின் பாடல்’. இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.

வேட்டைத் தோப்பு

கருணாகரன்
ஈழச் சிறுகதைகள்

அளவு 1 X 8
தாள் 18.6 கே.ஜி. மேப்லித்தோ
பக்கங்கள்: 192
விலை ரூ. 170



இந்தக் கதைகள் போர்க்காலத்தில் எழுதப்பட்டவை. போர் தீவிரம் பெற்றிருந்த காலத்தில் - வன்னியில் எல்லா வழிகளும் பயணங்களும் போர்முனைக்கே என்று திணிக்கப்பட்டிருந்த தருணத்தில் - அது பற்றிப் பேசுவதற்கு அஞ்சிய வேளைகளில் படைப்புகளான குமுறல்களே இந்தக் கதைகள். இழப்புகளும் காயங்களும் வலிகளுமாக மனித இருப்பு அலைக்கழிப்புக்குள்ளான கணங்களின் தாங்கொணா வேதனைகளும் கொண்ட இந்தக் கதைகள் அத்தனையும் அரசியலைப் பேசுவன. அரசியல் அறத்தின் நின்றும் வழுவியபோது, அந்த அறமே கூற்றாகி பலரதும் இருப்பைக் குலைத்துப்போட்டு உயிர்களைக் காவுகொண்டபோது ஏற்பட்ட அதிர்ச்சியின் அலைகளைப் பதிவு செய்திருக்கின்றன.

ப. தயாளன்
பரந்தன், கிளிநொச்சி

மின்னுவும் அம்மாவும்

ப்ரியா தம்பி
முகநூல் குறிப்புகள்

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 144
விலை ரூ. 120


கடக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு வரலாற்றைத்தான் ஒவ்வொருவரிடமும் பதித்துவிட்டுச் செல்கிறது. அதை வாசிக்கவும் உள்வாங்கவும்தான் நாம் மறுக்கிறோம். நல்லவேளையாக ப்ரியா தம்பி அந்தத் தவறை செய்யவில்லை. பதிலாக பிறந்தது முதல் ஒவ்வொரு நொடியும் தன் மகள் மின்னு தன்னிடமும், பிறரிடமும் எழுதிச் சென்ற சரித்திரத்தை அப்படியே அள்ளி ஆவணமாக்கியிருக்கிறார். தன் மகளை சிநேகிதியாக அவர் பார்த்திருப்பதும் பாவித்திருப்பதும்தான் இந்த நூலின் சிறப்பம்சம். எங்குமே தன்னை ஒரு படி உயர்த்திக்கொள்ளவும் இல்லை; ‘அம்மா’ என்னும் மிதப்பில் அதிகாரம் செய்யவுமில்லை. சுவாசம் போல் அநிச்சையாக மின்னுவின் ஒவ்வொரு அசைவையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். தன் சுக, துக்கங்களை பகிர்ந்துகொண்டு தன் உலகில் மின்னு மகிழ்ச்சியாக வாழ கற்றுக் கொடுத்திருக்கிறார். இது ‘குழந்தை வளர்ப்பு’க்கான நூல் அல்ல. மகளை காதலியாக, தோழியாக, வழிகாட்டியாக, தாயாக, ஆசானாக ஒரு தாய் பார்க்க ஆரம்பித்தால் எப்படிப்பட்ட மகிழ்ச்சி கிடைக்கும் என்பதை நடைமுறை ரீதியாக விளக்கும் சூத்திரம். சுருக்கமாக சொல்வதெனில், தன் புதையலை, தான் கண்டடைந்த விதம் குறித்து இந்நூலில் ப்ரியா தம்பி விளக்கியிருக்கிறார். அதன்மூலம் நம் பொக்கிஷத்தை நாமும் அடைவதற்கான பாதையை காட்டியிருக்கிறார். பயணப்படுவது அவரவர் பொறுப்பு. ஏனெனில் நிலவறையின் சாவி எந்த மந்திரவாதியிடமும் இல்லை.

கே.என். சிவராமன்

பாதகம் செய்பவரைக் கண்டால்

ஞாநி
கட்டுரைகள்


அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 224
விலை ரூ. 200



2013இல் ஞாநி எழுதிய ஓ பக்க கட்டுரைகள். ஆம் ஆத்மி கட்சியல்ல, கருத்து!, ஜெயலலிதா பிரதமராக முடியுமா?, ஸ்டாலினால் தி.மு.க.வைக் காப்பாற்ற முடியுமா?, ராகுல் காந்தியால காங்கிரசைக் காப்பாற்ற முடியுமா?, ஒரு முத்தமும் பல கேள்விகளும், பாலியல் குற்றத்துக்கு என்ன தண்டனை தரலாம்?, சினிமா 100: எதைக் கொண்டாட?, அத்வானி-மோடி: முகமூடிகளின் கதை, ஏன் எனக்கு பரதேசி படம் பிடிக்கவில்லை?, காதல் செய்யின் சாதலா?, கென்னடி - சே குவேரா - காஸ்ட்ரோ - டி.வி., காவல்துறைக்கு விடுதலை வருமா?, நோட்டா என்ற தோட்டா... இன்னும் பல சிந்தனையைக் கிளறும் இதுபோன்ற கட்டுரைகளின் தொகுப்பு.

அவதாரம்

நாசர்
திரைக்கதை - வசனம்

அளவு: 1 X 4
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 136
விலை ரூ. 200

ஹைதராபாத்தில் ஒரு சிறிய லாட்ஜ்... அந்த லாட்ஜில் குளித்துக்கொண்டிருந்தபோது, ஒரு பிம்பம் என் மனதில் தோன்றியது. நரசிம்ம அவதாரக் கோலத்தில் ஒரு கதாநாயகன், ஒரு வில்லனின் வயிற்றைக் கிழிப்பதாக அந்த பிம்பம் இருந்தது. ‘அவதாரம்’ உருவானதற்குக் காரணம் அந்த பிம்பம்தான், ஒரு நிகழ்வோ கதையோ இல்லை. அந்தப் பிம்பத்தைப் பல வடிவங்களில் எழுதிப் பார்த்தேன். நான், முதலில் ‘அவதாரத்தை’ திரைக்கதையாக எழுதவில்லை, கதையாகத்தான் எழுதினேன். கதையின் முதல் வடிவத்தை எழுதி முடித்தபிறகு காட்சிகளாகப் பிரித்து, அஞ்சல் அட்டை வடிவத்தில் நூறு அட்டைகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு அட்டையிலும் ஒரு காட்சியை எழுதினேன். எனக்கு எப்போதுமே கதையில் நம்பிக்கை கிடையாது. எந்த காலக்கட்டத்தில் எந்த சூழ்நிலையில் வாழ்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். ‘அவதாரம்’ கதை என்று எடுத்துக்கொண்டால் என்ன? ஒரு கதாநாயகன் தன்னுடைய நிலையை மீறி ஒரு உயர்நிலையை அடைய முயற்சிக்கிறான். அப்போது ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அந்தக் காதலி ஒரு வில்லனால் கற்பழிக்கப்படுகிறாள். கதாநாயகன் பழி வாங்குகிறான் என்பதுதான் கதை. இதற்குப் பின்னணியாக ஒரு வாழ்வியலைச் சேர்க்கின்றேன். நாசர் ஒரு பெரிய கூத்தாடி ஆகணும்னு நினைக்கிறான்; ரேவதியைக் காதலிக்கிறான்; ரேவதியை பாலாசிங் கற்பழிக்கிறான்; நாசர் பழி வாங்குகிறான். இதுதான் கதை. இதே நாசர் கம்ப்யூட்டர் இன்ஜினீயர், பாலாசிங் பெரிய முதலாளி, ரேவதி ஒரு புரபொஸர் என்றால் அது வேறு கதை. ‘த்ரி இடியட்ஸ்’ படத்தை நீங்கள் யாரிடமாவது கதையாகச் சொன்னால் எடுக்க முன்வரமாட்டார்கள். ‘அவதாரம்’ படத்தை முடித்ததும் முழுப் படத்தையும் பார்த்த இளையராஜா, மிகவும் ஆர்வமுற்று, “என்னய்யா இப்படி ஒரு படம் பண்ணியிருக்கே’’ என்று நெகிழ்ந்தார். இரண்டரை நாட்களில் ஆறு பாட்டைப் போட்டுக் கொடுத்தார். என்னுடைய சினிமா வாழ்க்கையில், மிக உன்னதமான காலக்கட்டம் ‘அவதாரம்’ எடுத்த நாட்கள்தான்.

நாசர்

மாங்குடி மருதனாரின் மதுரைக் காஞ்சி

பேரா. சாமுவேல் சுதானந்தா
விளக்க வடிவு

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 232
விலை ரூ. 200


சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக் காஞ்சி. இத் தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது இதுவே. மாங்குடி மருதனார் என்னும் புலவர் இந் நூலை இயற்றியுள்ளார். இப்பாடலில் 782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு உலகியல் உணர்த்துவதாய் இப்பாடல் பாடப்பட்டுள்ளது. பாண்டி நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும் வளத்தையும் கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது. இப் பாட்டின் தொடக்கத்தில் திரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப் பாடும் புலவர் பிறகு தேன் கூடுகள் நிறைந்திருக்கும் மலையுச்சிகளைப் பற்றியும் கூறுகிறார். இந்த உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும் பொருட்டு அமைந்தவை அல்ல, வாழ்க்கை அலை போன்று நிலையில்லாதது; எனவே நல்லறங்கள் செய்து மலை போல் என்றும் அழியாப் புகழைத்தேடிக்கொள் என்று மன்னனுக்கு மறைமுகமாய்க் கூறுவன.

பேரா. சாமுவேல் சுதானந்தா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியவர். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். விஸ்கான்சின், பென்சில்வேனியா பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ள சுதானந்தா, தற்சமயம் நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவருகிறார். இவரது முந்தைய நூல் ‘ஆட்டமும் அமைப்பும்: ஒரு நாட்டுப்புற நிகழ்கலை பற்றிய ஆய்வு.’

நமது கைகளில்

ஜெயமோகன்
உரையாடல்

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 168
விலை ரூ. 150

இலக்கிய அரட்டை என்ற நிகழ்வின் முக்கியத்துவம் பற்றி எப்போதுமே சொல்லிவந்திருக்கிறேன். இலக்கிய அரட்டை இல்லாமலாகும் போது இலக்கியம் இனிய விஷயமாக அல்லாமலாகிறது. இலக்கிய நுட்பங்களைக் கற்பது கொண்டாட்டமாக இல்லாமலாகிறது. இணையம் வந்தபின் இலக்கிய அரட்டைக்கு ஒரு புதிய வாசல் திறந்தது. இது உலகளாவிய இலக்கிய அரட்டை; பதிவாகும் அரட்டை. இந்த விவாதங்கள் மூலம் நான் கற்றது அதிகம்; சொன்னவையும் அதிகம். அவற்றில் நேரடியாக வாழ்க்கைபற்றி பேசிய விஷயங்களின் தொகுதி இந்நூல். இதில் நான் பேசியிருப்பவை அன்றாட வாழ்க்கையின் பல முகங்கள். நான் வாழ்க்கையை உலகியல் வெற்றியைக் கொண்டு அளப்பவனல்ல; மகிழ்ச்சியையும் நிறைவையும் கொண்டு அளப்பவன். அப்படி வாழ்க்கையை முழுமையும் மகிழ்ச்சியும் கொண்டதாக ஆக்கக்கூடிய வழிகள் பற்றிய உரையாடல்கள் இவை.

ஜெயமோகன்

ஆகவே கொலை புரிக!

ஜெயமோகன்
உரையாடல்

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 160
விலை ரூ. 140

நமக்கு நம்முடைய பண்பாட்டைப் பற்றிய புரிதல் என்பது மிகமிகக் குறைவானதாகவே உள்ளது. நம்முடைய பண்பாட்டின் எல்லைகள் என்ன, சாராம்சமான போக்குகள் என்ன, அதன் அதிகார அடுக்குகள் என்ன - எதுவும் நமக்குத் தெரிந்திருப்பதில்லைநாமறியும் நமது பண்பாடென்பது நம்மைச் சுற்றி இருக்கும் வாழ்க்கையில் இருந்து நாமறியும் சிக்கல்கள் மட்டுமே. நம்முடைய பண்பாட்டை நாம் இன்று அறியும்விதமே மிகச் சிக்கலானது. இன்றைய அரசியல் தேவைகளுக்காகப் பண்பாட்டை திரித்தும் உடைத்தும் பேசுபவர்களிடமிருந்து நாம் துண்டு துணுக்குகளாகவே பண்பாடு பற்றித் தெரிந்துகொள்கிறோம். ஆலயத்தில் இறைவனுக்கு உணவைப் படைப்பதனால் செல்வம் பெருகும் என ஒருவரும் அது உணவை வீணடித்தல் என இன்னொருவரும் சொல்வார்கள். அந்த சடங்கின் வரலாறென்ன, அது நமக்களிக்கும் மனநிலையின் விளைவென்ன என்று நாம் யோசிப்பதில்லைஇக்கட்டுரைகளில் பண்பாட்டு விவாதங்களை வரலாற்றுப் பின்னணியுடன் நிகழ்த்த முயன்றிருக்கிறேன். நம் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு சிக்கலுக்கும் பின்னாலிருக்கும் பண்பாட்டு முடிச்சுகளைத் தொட்டுக் காட்டுகிறேன். பண்பாட்டை ஒரு அமைப்பாக அல்லாமல் ஒரு தொடர்ந்த பரிமாணமாகவே பார்க்கிறேன். தன் பண்பாட்டை அறியவும் தன் வாழ்க்கைச் சூழலைப் புரிந்து கொள்ளவும் முயலும் ஒருவருக்கு இந்நூல் புதிய பார்வைகளை அளிக்கும்.

ஜெயமோகன்

ஓம் சக்தி ஓம் பராசக்தி


லக்ஷ்மி மணிவண்ணன்
கட்டுரைகள்

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 256
விலை ரூ. 210

இக்கட்டுரைத் தொகுப்பில், அன்றாட நிகழ்வுகளில் காணக்கூடிய சிறுமைகளில் பெரும் முரண்களை பொருத்திப் பார்க்கிறார் லக்ஷ்மி மணிவண்ணன். நாம் சாதாரணமாக ஒதுக்கித்தள்ளும் அன்றாடத்தன்மை கொண்ட கணங்கள் பெரும் அர்த்தப்பாடு கொண்ட கணங்களாக இவருடைய உரையாடல்களில் மாற்றம் கொள்கின்றன. இத்தகைய மாற்றத்தை படைப்பு மனம் மட்டுமே சாத்தியப்படுத்தும் வல்லமை பெற்றது. மற்ற முறைமைகளில் அன்றாட நிகழ்வுகள் மதிப்பிழந்து போகின்றன. இதிலுள்ள எல்லாக் கட்டுரைகளிலும் ஒரு அன்றாடத்தன்மையைப் பார்க்க முடிகிறது. அரசியல் சொல்லாடல்களிலும் சமூக விஞ்ஞான முறைமைகளிலும் சாத்தியப்படாத உண்மைகள் இத்தகைய அன்றாடத்தன்மை சார்ந்த சிந்தனைகளில் வெளிப்படும் சாத்தியத்தைக் கொண்டுள்ளன.

ராமாநுஜம்