புதிய ஈரானிய சினிமா

தொகுப்பு: சஃபி
கட்டுரை

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 216
விலை ரூ. 160


அகில உலக சினிமா இன்று ஈரானிய இயக்குனர்களின் தலைமையில் வழி நடத்தி செல்லப்படுகிறது. அன்று ஐரோப்பியர்கள் செய்துகாட்டியதைப் போல், சாதாரணமாக தெருவில் நடந்துபோகும் ஒரு குழந்தையை நோக்கி காமிராவை திருப்புவதின் மூலம், அவர்கள் இச்சாதனையை செய்துகாட்டியிருக்கின்றனர். ‘ஆப்பிள்’ படத்தை எடுத்த சமிரா மக்மல்பஃப், கான்ஸ் திரைப்பட விழாவில் தனது இரண்டாவது படத்திற்காக ஜுரி பரிசை வென்றபோது, ஈரானிய சினிமாவின் இளமைக்கு அங்கிருக்கும் அரசியல் அமைப்பிற்கு எதிராக செயல்படும் யுக்திதான் காரணம் என்று சுட்டிக்காட்டினார். தனது பரிசை, Ôஜனநாயகத்திற்கும் ஒரு நல்ல வாழ்க்கைக்கும் போராடிவரும் நம்பிக்கையின் பிரதிபலிப்பான இளைய சமுதாயத்திற்கு’ அர்ப்பணித்தார். பல அராஜகங்களுக்கு நடுவே 1960களின் இறுதியில் தோன்றி, 1970களிலும் 1980களிலும் தனது இருப்பை தக்க வைத்துக்கொண்டு, 1990களில் உலக புகழ் பெற்ற ஈரானிய சினிமாவின் புதிய அலை திரைப்படங்களை பார்க்கும்போது, ஜனநாயகமில்லாத இடத்தில் எப்படி ஆழமான படைப்புகளை உருவாக்க முடிகிறது என்ற கேள்வி எழாமல் இருக்காது. அங்கிருப்பதைவிட ஓரளவுக்கு இந்தியாவில் ஜனநாயகம் இருந்தும் மாற்று சினிமா முயற்சிகள் இந்திய திரைப்பட அமைப்பில் வலிமை இழந்து வருவதற்கான காரணம் என்ன? ஈரானைவிட அதிக படங்களை எடுக்கும் தமிழ்நாட்டில் மாற்று சினிமா முயற்சிகள் ஒரு முழுமை பெறாமல் மடிந்து போனது ஏன்? இந்த பிரச்சனைகளுக்கு இங்கு உடனடியாக பதில் தேட வாய¢ப்பில்லை என்றாலும், ஈரானிய புதிய அலை திரைப்படங்களில் வரும் பயணங்களிலிருந்தும் அந்த பயணங்களால் உருவாகும் சந்திப்புகளில் இருந்தும், நாம் கற்றுகொள்ள வேண்டியவை ஆயிரமிருக்கின்றன என்ற வகையில், நமது சினிமாவில் இருக்கும் வெற்று இடங்களையாவது நாம் அறிய இந்த புத்தகம் உதவும். 

வெங்கடேஷ் சக்ரவர்த்தி


ஆசை முகங்கள்

தொகுப்பு: சி. மோகன்
கட்டுரை

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 112
விலை ரூ. 90


நம் பால்ய நினைவுகளின் வளமான பொக்கிஷங்களாகவும் இதமான பிம்பங்களாகவும் நடிகர், நடிகையர் வீற்றிருக்கிறார்கள். பால்ய நினைவுகள் ஒரு நதியென நம்முள் சலனித்துக்கொண்டிருக்கிறது. அது கட்டுப்பாடுகளின் மாசுகளற்ற தூய நதி. அதில் முக்குளித்தும் நீந்தியும் மனம் கொள்ளும் ஆசுவாசம் அலாதியானது. சமயங்களில், அதன் கரையோரத்தில் கால் நனைய நடந்து திரிகிறோம். சமயங்களில் கரையோரமாய் அமர்ந்து எவ்வித பிரக்ஞையுமின்றி ஒரு கூழாங்கல்லை அதனுள் எறிகிறோம்; அது குமிழ்களையும் வளையங்களையும் மேல்மட்டத்தில் உருவாக்கியபடி அழயாழத்துக்குள் இறங்குகிறது. நாம் வேறொரு காலத்தில் சஞ்சாரம் கொள்கிறோம். இத்தகைய சஞ்சாரங்களிலிருந்து உருவாகியிருப்பதே இத்தொகுப்பு.

நம் திரையுலகின் வகீகர நாயகிகள் பற்றிய ஓர் ஆராதனை இது. அன்று ஆண்களின் மதி மயக்கிய டி.ஆர். ராஜகுமாரியிலிருந்து, இன்றைய சுட்டும் விழிச் சுடரான அசின் வரையான இருபது நட்சத்திர நாயகிகள் பற்றிய நினைவலைகளின் தொகுப்பு. சி. மோகன், அ. முத்துலிங்கம், எஸ். ராமகிருஷ்ணன், அசோகமித்திரன், வீ.எம்.எஸ். சுபகுணராஜன், வஸந்த், ராம்கோபால் வர்மா, ஜெயமோகன், சுகுமாரன், பாலுமகேந்திரா, நாசர், யுகபாரதி, சீனு ராமசாமி, பாஸ்கர்சக்தி, ரவிக்குமார், அஜயன்பாலா, எம்.டி. முத்துக்குமாரசாமி, R.P. ராஜநாயஹம் உட்பட வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த இருபது ஆண் ஆளுமைகள் தங்களின் நினைவுகளின் நீரோடையிலிருந்து நீர் வார்த்திருக்கிறார்கள்.

ஆயுதப் போராட்டத்தால் இனி உலகைக் காப்பாற்ற முடியாது


எஸ்.என். நாகராசன்
நேர்காணல்

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 96
விலை ரூ. 60


எஸ்.என். நாகராசன், இந்தியாவின் மூத்த வேளாண்மை அறிவியலாளர்களில் ஒருவர்; மார்க்சிய சிந்தனையாளர்; கீழை மார்க்சியம் என்ற கருத்து நிலையை முன்வைத்தவர். பசுமைப் புரட்சியை எதிர்த்து தன்னை முழுமையாகவே ஒரு மார்க்சிய களப் பணியாளராக ஆக்கிக்கொண்டவர். ‘மார்க்ஸியம் அடிப்படையில் ஒரு ஐரோப்பிய சிந்தனையாகவே புரிந்து கொள்ளப்பட்டது. அதை ஒரு மேலைநாட்டு அறிவியல் சிந்தனையாக அணுகக்கூடாது, அதை மெய்யியல் நோக்கில் அணுகவேண்டும்’ என்னும் எஸ்.என். நாகராஜன் இந்திய அளவில் முக்கிய சிந்தனையாளராக அறியப்படுகிறார்.

தேசியம், சூழலியல், பெண்ணியம், தலித்தியம், பெரியாரியம், அரபு எழுச்சி, நவ காலனிய எதிர்ப்பு போன்றவை விமோசன அரசியலின் இணைந்த பகுதிகளாக ஆகியிருக்கும் இன்றைய சூழலில், ஆயுதப் போராட்டத்தின் சாத்தியம் சாத்தியமின்மை பற்றி பேசும் எஸ்.என். நாகராசனுடனான இந்த உரையாடல் நம் காலத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்கிறது.

பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள்

தொகுப்பு: பெ. முத்துலிங்கம்
பாடல்

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 224
விலை ரூ. 160

இலங்கையில் பிரித்தானியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட கோப்பி, தேயிலை, இரப்பர், தென்னைத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக 1820களில் அன்றைய மதராஸ் பிரசிடென்சியிலிருந்து (இன்றைய தமிழகம்) அரை அடிமைகளாக இந்தியத் தமிழர்கள் கொண்டுவரப்பட்டனர். இதற்காக கட்டுமரத்திலும் சிறு படகுகளிலும் இலங்கைத் தீவினை நோக்கி பயணம் செய்வதர்களில் பலர் கடலுக்கு பலியாகினர். உயிர் தப்பி கரையேறியவர்களில், மன்னாரிலிருந்து கண்டி நோக்கிய அடர்ந்த காடுகள் வழியான நடைப்பயணத்தில் சிலர் மலேரியா நோய்க்கும் சிலர் காட்டு மிருகங்களுக்கும் இரையாகினர். எஞ்சிய சிலரே மலைப் பிரதேசங்களை வந்தடைந்தனர். இவ்வாறு எஞ்சியோர், வழியில் தாம் அடைந்த துயரங்களை, இழப்புகளை, ஏமாற்றங்களை வாய்மொழி பாடல்கள் மூலம் அடுத்த தலைமுறைக்கு கூறிச் சென்றனர். அவர்கள் அதனை தமக்கடுத்த தலைமுறைக்கும் வாய்மொழிப் பாடலாகவே வழங்கினர். இவ்வாறு தலைமுறைகள் வழி பரிமாறிக்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சம்பவங்களையும் துயரங்களையும் போராட்டங்களையும் ஐம்பதுகளில் பாவலர்கள் பதியும் முயற்சியில் ஈடுபட்டனர். தம் முன்னோரின் வாய்மொழி வரலாற்றை அச்சுப்பிரதியாக கொண்டு வந்தனர். இதில், தம் மூதாதையர்களிடம் பெற்ற வரலாற்று வாய்மொழிப் பாடல்களுடன் தம்காலத்தில் நடைபெற்ற தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையிலான போராட்டங்களையும் ஆணாதிக்கம், மது பழக்கம், குடியுரிமை ஆகியவைப் பற்றியும் பதிவு செய்துள்ளனர். இம்முயற்சியே மலையக மக்களது முதல் மக்கள் ஆவணமாகும். இந்த அச்சுப் பிரதிகளின் தொகுப்பே இந்நூல். இலங்கைக்கு முதன்முதலாக வந்த அன்றைய மலையகத் தமிழர்களின் வரலாற்றுப் பின்புலத்தையும் அனுபவித்த துயரங்களையும் இத்தொகுப்பு மூலம் அறியலாம்.