கதாநாயகனின் மரணம்

ராஜன்குறை
கட்டுரை

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 262
விலை ரூ. 180

தமிழ் சினிமா வரலாறு, சமகால போக்குகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். வரலாறு, சித்தாந்தம் மட்டுமின்றி, தத்துவக் கோட்பாடுகளும் இந்நூல் முழுக்க இழையோடுகின்றன. ‘திரைப்படம் ஒரு மொழியா?’ என்ற கேள்வியை முன்வைக்கும் ராஜன்குறை, நம்மை மேற்கத்திய விவாதங்கள் மூலம் வழிநடத்தி, திரைப்பட தொகுப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சினிமா மொழியற்ற எழுத்து என வரையறுக்கிறார். வெகுஜன சினிமாவில் தார்மீக சாகசக் கதாநாயகன் முன்னிறுத்தப்படுவதும் அதன் உள்ளியக்கம் தனித்தியங்குவதும் அது முதலீட்டியத்தின் வடிவமாகப் பார்க்கப்படுவதும் ஆகிய போக்குகளை நாம் தீவிரமாக ஆராய வேண்டியதன் அவசியத்தையும் ராஜன்குறை சுட்டிக் காட்டுகிறார். இவரது வெகுஜன சினிமா மீதான மறுவாசிப்பு என்பது ரொமாண்டிஸிசம் சார்ந்தது அல்ல; அதற்கான தத்துவார்த்த அடிப்படைகளைக் கொண்டதாகும்.

ராஜன்குறை, நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தமிழ் திரைப்படங்கள் குறித்த ஆய்வு செய்வுக்காக மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது, நியூடெல்லியில் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்.

தீராத் தியாகம்

ஸ்டாலின் ராஜாங்கம்
கட்டுரை

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 192
விலை ரூ. 100


தலித்துகள் குறித்து பொது சமூகம் மட்டுமல்ல தீவிர சிந்தனையுலகம் கொண்டுள்ள கருத்துகளையும் பரிசீலிக்கக்கோருபவை இந்நூலில் உள்ள கட்டுரைகள். 1990களுக்கு பிந்தைய தலித் எழுச்சியின் ஊடாக உருவான கருத்துகள், அடையாளங்கள் குறித்த தொடர்ச்சியை வரலாறு, தத்துவம் என நீட்டிக்கும் இம்முயற்சியில் அதன் போதாமைகளையும் இத்தொகுப்பு சுட்டிக்காட்டத் தவறவில்லை.


நவீன பெளத்த மறுமலர்ச்சி இயக்கம்

பதிப்பும் தொகுப்பும்: ஸ்டாலின் ராஜாங்கம்
கட்டுரை

அளவு: டெம்மி 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 78
விலை ரூ. 50


பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சென்னை மாகாணத்தில் கால்கொண்ட நவீன பெளத்த மறுமலர்ச்சி இயக்கம் குறித்தும் அதில் ஈடுபட்டவர்களிடையே இருந்து வந்த கருத்து நிலைகள், அவை சார்ந்த விவாதங்கள் குறித்தும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெளத்தம் சார்ந்த கருத்துக்களோடு, அக்காலத்தில் உருவான பெளத்த சங்க நிர்வாகம் மற்றும் நடைமுறை குறித்து அயோத்திதாசரும் ம.சிங்காரவேலரும் நடத்திக்கொண்ட விவாதங்களே இத்தொகுப்பு. இவ்விவாதங்கள் அயோத்திதாசர் நடத்திய ‘தமிழன்’ (1907 - 1914) ஏட்டிலிருந்து முதன்முறையாக நூலுரு பெறுகின்றன.


கார்டூனாயணம்

பதிப்பாதிரியர்கள்:
எம்.எஸ்.எஸ்.பாண்டியன்
வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்
டிராட்ஸ்கி மருது
கேலிச் சித்திரம்

ISBN-978-81-909922-4-4
அளவு: டெம்மி 1 X 4
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 272
விலை ரூ. 500

பேரறிஞர் அண்ணாவைப் பற்றி பத்திரிகைகளில் வெளியான கேலிச் சித்திரங்களின் தொகுப்பு இது. தி.மு.கழகத்திற்கும் ஓவியங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றி ஆய்வுலகில் இன்னும் பேசப்படவில்லை. பிறப்பின் அடிப்படையில் அமைந்த இழிவை நீக்கவும் வகுப்புரிமை வேண்டியும் மொழி காக்கவும் போராடிய தூரிகைகளின் வரலாறுகள் மறக்கப்பட்டுவிட்டன. மறக்கப்பட்ட வரலாற்றை நனவு நிலைக்குத் திருப்ப, இந்தத் தொகுப்பு உதவக்கூடும். எழுத்துத்துறையிலும் மேடையிலும் சமூக, பண்பாட்டு மாற்றங்களை வலியுறுத்திய இயக்கம் ஓவியத் துறையையும் தன் ஆயுதமாக்க எடுத்த முயற்சிதான் இது. 

டிராட்ஸ்கி மருது


கறுப்பு சிகப்பு இதழியல்

தொகுப்பாசிரியர்: இரா.பாவேந்தன்
கட்டுரை

ISBN-978-81-909922-3-7
அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 456
விலை ரூ. 350


திராவிட இயக்க இதழாளர்களின் இதழியல் பார்வை, அணுகுமுறை, இதழியலின் உட்கூறுகளைக் கருத்தியல் பரப்புரைகளுக்குப் பயன்படுத்திய முறை, திராவிட இயக்க இதழ்கள் ஏற்படுத்திய புதிய போக்குகள், பார்ப்பனர்களும் அவர்களுடைய சார்பாளர்களும் இந்த இயக்க இதழ்களை எதிர்கொண்ட விதம் முதலானவை பற்றிய திராவிட இயக்க இதழாளர்களின் கட்டுரைத் தொகுப்பு இந்நூல். ஏகாதிபத்தியச் சார்பாளர்கள், சூனாமானா, பள்ளன் பறையன் கட்சி என சமூகப் பண்பாட்டுப் புறக்கணிப்புக்கு ஆளான திராவிட இயக்கத்தின் அறிவுபூர்வமான இதழியல் பணிகளைப் பதிவுசெய்யும் அச்சு ஊடக ஆவணம். இந்நூலின் தொகுப்பாசிரியர் முனைவர் இரா.பாவேந்தன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.


சொல்வலை வேட்டுவன்

பா.ரா. சுப்பிரமணியன்
கட்டுரை

ISBN-978-81-909922-1-3
அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 400
விலை ரூ. 320

இந்த நூலில் பா.ரா.சுப்பிரமணியன், வெவ்வேறு காலங்களில், சில துறைகளில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன என்றாலும், பெரும்பான்மையான கட்டுரைகள் நூலாசிரியர் ஈடுபட்ட நாட்டுப்புறக் கலை, ஈடுபட்டுள்ள அகராதிக் கலை தொடர்பானவையே. தமிழ் நாட்டுப்புறப் பாடல்களில் முதன்முதலில் ஆய்வு செய்தவர் என்பதால் பா.ரா.சுப்பிரமணியனின் நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றிய கட்டுரைகள் மக்கள் பாடல்களின் புதுமையையும் அமைப்பையும் எடுத்துக்காட்டும் வகையில் இருக்கின்றன. அறுபதுகளில் நாட்டுப்புறத் துறையில் செல்வாக்குப் பெறத் தொடங்கிய ‘அமைப்பியல்’ அணுகுமுறையை இவற்றில் காணலாம். ஜெர்மனியில் 12 ஆண்டுகள் தமிழ்க் கற்பித்த போது தற்காலத் தமிழுக்கு வேண்டிய அகராதிகள் இல்லாததை உணர்ந்து, பின்னர் அவற்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டதால் அகராதிகள் குறித்து எழுத இவருக்குப் பல வாய்ப்புகள் ஏற்பட்டன. சொற்களும் அவற்றின் பொருள்களும் பயன்பாடும் ஒரு தங்கச் சுரங்கம் போல் இருப்பதை இந்தக் கட்டுரைகள் வழியாகக் காட்டியிருக்கிறார். இவர் விரித்திருக்கும் வலையின் ஊடாகச் சொற்களைப் பார்ப்பது ஒரு புது அனுபவத்தைத் தரும். இதுவே பா.ரா.சுப்பிரமணியனின் முதல் கட்டுரைத் தொகுப்பு நூல்.


திராவிட நாட்டுக் கல்வி வரலாறு

திராவிடப் பித்தன், பதிப்பாசிரியர்: இரா.பாவேந்தன்
கட்டுரை

ISBN-978-81-909922-0-6
அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 232
விலை ரூ. 190

திராவிட இயக்க முன்னோடிகளில் என்.வி.என். என்று அழைக்கப்படும் என். விஜயரங்கம் நடராஜனால் 1949ஆம் ஆண்டு தொடங்கி நடத்தப்பட்ட வார இதழ் ‘திராவிடன்’. இந்த இதழில் ‘திராவிடப் பித்தன்’ என்பவர் ஆரம்பக் கல்விச் சீர்திருத்தம் என்ற தலைப்பில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இராஜாஜி 1953ஆம் ஆண்டு தன் அமைச்சரவையைக்கூடக் கலந்து ஆலோசிக்காமல் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். இச்சூழலில் ‘திராவிடன்’ இதழில் பார்ப்பனரல்லாதார் பார்வையில் தமிழகக் கல்வி வரலாற்றை விரிவாக எழுதினார் திராவிடப் பித்தன். சமண, பெளத்த சமயங்களின் கல்விப் பணிகள், தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கல்வியியல் சிந்தனைகள், கிறித்துவச் சமயப் பணியாளர்களின் கல்விப் பணிகள், காலனிய அரசின் கல்விப் பணிகள் ஆகியவற்றை வரலாற்று நோக்கில் புள்ளி விவரங்களுடன் விரிவாக ஆவணப்படுத்தியுள்ளார்.  திராவிடப் பித்தன் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து விரிவான ஆய்வு முன்னுரை எழுதிப் பதிப்பித்துள்ள இரா. பாவேந்தன், தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.







திராவிட சினிமா

தொகுப்பாசிரியர்கள்: இரா.பாவேந்தன், வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்.
கட்டுரை

ISBN-978-81-909922-2-0
அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 335
விலை ரூ. 270



மேற்கத்திய அறிவியல் ஊடகமாக அறியப்படும் சினிமா வைதீக, சனாதன, சாதிய சமூகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அக்கூறுகளையே உள்வாங்கிக்கொண்டது. இப்போக்கிற்கு எதிராக அணி திரண்ட திராவிட இயக்கத்தின் சினிமா பற்றிய பார்வை, சினிமாவை அவ்வியக்கம் அணுகிய முறை, அவ்வூடகத்தின் மூலம் கருத்துப் பரப்புரைகளை மேற்கொண்ட முறை, திராவிட இயக்கத் திரைப்படங்கள் ஏற்படுத்திய சமூக, பண்பாட்டு, அரசியல் மாற்றங்கள், தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு திராவிட இயக்கம் ஆற்றிய பங்கு முதலானவை தொடர்பான திராவிட இயக்கப் படைப்பாளிகளின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். வைதீக, சனாதன, சாதீய சமூகத்தின் அனைத்து ஆதிக்கத்திற்கும் எதிராக தீரமுடன் போர்க்குரல் எழுப்பிய போது ‘கூத்தாடிகள்’ எனக் கொச்சைப்படுத்தப்பட்ட திராவிட இயக்கத்தின் காட்சி ஊடக ஆவணம்!